என் வாழ்வில் நடந்த சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு

தமிழ் ஆசிரியர்

நான் திருக்கனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது நடந்த மிகவும் சுவாரசியமான ஒரு சம்பவம்.

எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது, திருமதி. காந்தி மதி அவர்கள் தான் எங்களுக்குத் தமிழ் ஆசிரியர். காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வு என்று நினைக்கிறேன். தேர்வு முடிந்து திருத்திய பேப்பரை வகுப்பில் அனைவருக்கும் கொடுத்து கொண்டு இருந்தார் எங்கள் தமிழ் ஆசிரியை.

நமக்கு எப்போழுதும் தேர்வு எழுதுவதற்குப் பயந்தது இல்லை, ஆனால் தேர்வு முடிந்து நாம் எழுதிய பேப்பரை சிகப்பு கலரில் கிறுக்கி அதாங்க திருத்தி கொடுப்பார்களே அப்போழுது ஒரு விதமான  பயம் வரும் பாருங்கள் அதனை விவரிக்கமுடியாது. அதுவும் இருபாலாரும் படிக்கும் பள்ளியில். இதனை அனுபவித்தால் தான் தெரியும்.

அன்று, அனைவருக்கும் தமிழ் ஆசிரியர் தான் திருத்திய பேப்பரை கொடுத்துக்கொண்டு இருக்கிறார் ஆனால் என் பெயரை மட்டும் கடைசி வரை கூப்பிடவில்லை. எனக்குப் பயம் கூடிக்கொண்டே இருந்தது.

என் மனதில், நாம் நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கிவிட்டோமோ மன்னிக்கவும் பூஜியம் மதிப்பெண் வாங்கிவிட்டோமோ என்ற பயத்தில் கடவுளை நினைத்துக்கொண்டு. கடவுளே,  இன்று மட்டும் என்னைக் காப்பாற்றிவிடு என்று பிரத்தனை செய்து கொண்டு இருந்தேன். ஆனால் அன்று கடவுள் என்னைக் காப்பாற்றவில்லை. எப்படிக் காப்பாற்றுவார் நான் எழுதியது அப்படி.

கடைசியில், தாஜூதீன் என்று புன் சிரிப்பாகக் கூப்பிட்டார், அதுவும் தனியாகவைத்து இருந்த என் பேப்பரை எடுத்துக்கொண்டு. எனக்கு மேலும் குழப்பமடைந்தவனாக ஆசிரியர் அருகில் போய் பயத்துடன் நின்றேன். அனைத்து மாணவ மற்றும் மாணவிகள் அனைவரும் எங்களையே பார்த்தார்கள்.

என்னுடைய தேர்வு பேப்பரில் இருந்து, நான் எழுதிய ஒரு கேள்வி மற்றும் அதற்கான பதிலையும் அனைவருக்கும் படித்துக்காட்ட சொன்னார்கள். நான் நடுக்கத்துடன் படிக்க தொடங்கினேன்.

கேள்வி

அக்பர் மற்றும் பீர்பால் கதை. முழுமையான கேள்வி எனக்கு நினைவில் இல்லை.

பதில்

குளிர்ந்த நீரில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க முடியும், அவ்வாறு நின்றால் அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் …. என்ற நீதிக் கதை.

இந்தக் கதையில் ஒரு சில இடங்களில் அக்பர் அவர்கள் மாடிப் படியில் இருந்து பார்த்தார், மாடிப் படியில் இருந்து வந்தார் என்று வரும். இந்த வார்த்தையில் தான் சிறு தவறு நடந்துவிட்டது.

சிறு தவறுதான் மாடிப் படியில் என்று வரும் வார்த்தையில் மா வுக்கு பதில் பா என்று கவனக்குறைவாக எழுதிவிட்டேன்.

நான் அனைவரும் மத்தியில் படிக்கும் போழுது மாடிப் படியில்… என்று தான் படித்தேன். அப்போழுது ஆசிரியர் குறுக்கிட்டு, நீ என்ன எழுதி இருக்கிறாயோ அதைப் படி என்றார். அப்போழுது தான் தெரிந்தது என் தவறு. நான் அதற்கு மேல் படிக்கவில்லை தவற்றை உணர்ந்து தலைகுனிந்து இருந்தேன். ஆனால் ஆசிரியர் என் தவற்றை அனைவருக்கும் சொல்லிவிட்டார். அனைவரும் சிரித்துவிட்டார்கள் ஆசிரியர் உட்பட.

நல்லவேளையாக, தமிழ் ஆசிரியர் அவர்கள், நான் இதனைக் கவனக்குறைவாக்கத்தான் எழுதிவிட்டேன் என்று உணர்ந்து என்னை அடிக்காமல் மன்னித்து விட்டார்.  

இன்றும், இந்தச் சம்பவம் என் நினைவில் பசு மரத்தில் அடித்த ஆணி போன்று இருக்கிறது

தொடரும்…

தாஜூதீன்

 

Advertisements