24-06-2018

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர் என்கிற கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர். எங்கள் குடும்பம் சிறிய குடும்பம், சிறிய குடும்பம் போன்று எங்களுக்குச் சிறிய அளவு விவசாயம் நிலம் இருக்கிறது. என்னுடைய தாத்தாவுக்கு விவசாயம் தான் முதன்மையான தொழில் என்று அப்பா சொல்லி கேட்டு இருக்கிறேன்.

ஆனால் என்னுடைய அப்பாவுக்கு விவசாயம் முதன்மை தொழில் இல்லை. அவர்கள் அரசு வேலையில் இருந்ததனால் தாத்தாவுக்கு பிறகு விவசாயம் முதன்மையில் இருந்து இரண்டாம் இடத்துக்கு போயிற்று. இருந்தும், என்னுடைய அப்பா, பகுதி நேரமாக விவசாயம் செய்தார்கள். எனக்குத் தெரிந்து பெரும்பாலும் நெல் பயிர் தான் விளைவிப்பார்கள்.

எங்கள் நிலம் திருக்கனூர் அருகிலுள்ள தெற்கொள்ளியில் இருக்கிறது, எங்கள் வீட்டில் இருந்து சுமார் 2-3 கி.மீ இருக்கும். நெல் அறுவடை நேரங்களில், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை சைக்கிளில் சென்று வருவேன். மதியம் அப்பாவுக்குச் சாப்பாடு மற்றும் மாலையில் இரவில் தங்கி காவல் இருப்பவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு (சைக்கிளில்) செல்வது தான் என் வேலை.

மாலை நேரச் சாப்பாடு எடுத்துக்கொண்டு போகும் போழுது தான் மிகவும் திகில் கலந்த பயமாக இருக்கும்.

மாலை நேரங்களில், சுமார் 6 மணியளவில் என்னுடைய அம்மா சாப்பாட்டை ஒரு தொங்கு பாத்திரத்தில் வைத்து தளச்சப்புள்ள பார்த்து போ என்று சொல்லி அனுப்புவார்கள். சாப்பாட்டைச் சைக்கிளில் மாட்டிக்கொண்டு தனியாக, பள்ளிவாசல் பின்புறத்தில் உள்ள சிறிய சாலை வழியாக தெற்க்கொள்ளிக்கு செல்வேன். அந்தச் சாலையின் இருபுறங்களிலும் நன்கு உயர்ந்த கரும்பு மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்தப் பாதையில் பயத்துடனும், இதற்கும் மேலாக மண்ணாடிப்பட்டு மற்றும் தெற்கொள்ளி செல்லும் பாதை பிரியும் இடத்தில் ஐயனார் கோயில் இருக்கும். அதனைக் கடக்கும் போதும் ஒரு விதமான பயத்துடன் வேகமாகச் சைக்கிளை மிதித்துச் செல்வேன். இரவில் தங்கி இருப்பவருக்குச் சாப்பாட்டை கொடுத்து விட்டு, அதே வேகத்தில் திரும்பி வீட்டுக்கு வந்தடைவேன். இப்போழுது நினைத்தாலும் எனக்கு வியப்பாகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.

இந்தப் பயம் மாலை நேரங்களில் மட்டும் தான், ஆனால் மதியம் சாப்பாட்டை என்னுடைய  அப்பாவுடன் அந்த நெல் அடிக்கும் களத்தில் வாழையிலையில் சாப்பிடுவோம், அந்த நாட்களின் அருமை அப்போழுது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இன்று அந்த நாட்கள் திருப்பிவராதா என்று ஆசைபடுகிறேன், அது நடக்காது என்று தெரிந்தும்.

நெல் அறுவடை காலங்கள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நீடிக்கும்.

  • முதல் நாள், நெல் கதிர்களை அறுத்துச் சிறு கட்டுகளாகக் கட்டுவார்கள்.
  • இரண்டாம் நாள், கட்டிய நெல் மூட்டையைக் களத்துக்கு எடுத்து வருவார்கள்.
  • மூன்றாம் நாள், நெல் கட்டை அவிழ்த்து போராக்கி டிராக்டர் மூலம் அடித்து நெல்லை பிரித்து நெல் போராக வைப்பார்கள்.
  • நான்காம் நாள், நெல் போரை மூட்டைகளாக்கி எடைபோட்டு எடுத்துக்கொண்ட செல்வார்கள்.

அப்பாவுக்கு, இந்த நான்கு மற்றும் ஐந்து நாட்களும் மிகவும் கடினமான நாட்களாக இருக்கும். அனைத்து விவசாயிக்கும் இதே நிலை தான், குறிப்பாக சிறு விவசாயிக்கு.

சிறு விவசாயிக்கு சொந்தமாகப் பம்பு செட்டு இருக்காது. அவர்கள் நினைத்த நேரத்தில் தண்ணீரை பயிருக்கு வைக்கமுடியாது. இதனால் மகசூல் குறையும். சொந்தமாக டிராக்டர் இருக்காது. நெல் அறுவடை நாட்களில் டிராக்டரை தேடி அலைவார்கள், அவர்கள் நினைத்த நேரத்தில் டிராக்டர் வராது. இறுதியாக அவர்கள் நினைத்த மகசூல் வரவில்லை என்றவுடன் ஒரு மன சோர்வு வரும் பாருங்கள், அது தான் சிறு விவசாயின் வாழ்க்கை. சில நேரங்களில் இவைகளுடன், 8 வழி பசுமை சாலையும் சேர்ந்து வரும். 

தாஜூதீன்

Advertisements