ஜனநாயகத்தை பேணுவோம்!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது.
புதுச்சேரி
இந்தியா சுதந்திரம் அடைந்து 7 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அடங்கிய ஒன்றுபட்ட பகுதிகள் 1954ஆம் ஆண்டு இந்தியாவுடன் இனைக்கப்பட்டது, 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது. புதுச்சேரி மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் மிகவும் சிறிய நிலப்பரப்புக் கொண்ட இடமாக இருந்ததினாலும், மாநிலத்துக்கு என்று தனி வருவாய் இல்லாமையினாலும் புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக அங்கீகரித்தது மத்திய அரசு.
ஆரம்பக்காலங்களில், புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து நிதி மற்றும் நிர்வாக உதவிகளை மத்திய அரசு கொடுத்ததினால் புதுச்சேரி மாநிலம் அதிக வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறிக்கொண்டே இருந்தது. அதற்கு முக்கிய காரணம், பெரும்பாலும் மத்தியிலும், புதுச்சேரி மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததினால், எந்த ஒரு அதிகார போட்டிகளின்றி புதுச்சேரி மாநிலம் பல நன்மைகளை அடைந்தது.
பிறகு, மாநில கட்சிகளின் ஆட்சி புதுச்சேரியில் அமைந்த பொழுது, சிறு சிறு கருத்து வேறுபாடுகளுடன், மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருந்தது.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக (2016ஆம் ஆண்டு முதல்) தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியிலும் அதற்கு நேர் எதிர் தேசிய கட்சியான பாஜக ஆட்சி மத்தியிலும் இருக்கும் இந்தக் காலகட்டம் புதுச்சேரிக்கு மிகவும் கடினமான காலகட்டம் மாறியது.
குறிப்பாக, மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநரான கிரன்பேடி மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நாராயணசாமி. இந்த அதிகாரமிக்க இரண்டு பதவிகளினால் நிர்வாக முடிவுகள் எடுப்பதற்கு யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்ற மோதல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
யாருக்கு அதிக அதிகாரம் என்று தினந்தோறும் இந்த இருவருக்கம் அறிக்கை போரே நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கிடையில் அரசு அதிகாரிகளின் பாடுதான் படு மோசம், அரசு அதிகாரிகள் இரு தலை கொள்ளியை போன்று ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றினால் புதுச்சேரி மக்களின் நலத் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிகள் பாதிக்கப்படுகிறது.
டெல்லி மக்களினால் மக்கள் மன்றம் மூலம் (முதலமைச்சராக) நிராகரிக்கப்பட்ட கிரன்பேடி அவர்கள், மத்திய அரசின் உதவியினால் புதுவையில் ஆளுநராக அதிகமான அதிகாரத்தில் இருக்கிறார்.
புதுச்சேரி மக்களால், மக்கள் மன்றம் மூலம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி அவர்கள், தன் கட்சி மத்தியில் இருக்கும்பொழுது புதுச்சேரி ஆளுநரின் அதிகாரத்தை சொல்லிக்கொடுத்ததன் விளைவுகளை இப்பொழுது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்.
ஜனநாயகத்தை பேணுவோம்
இந்திய ஜனநாயகத்தில், மாநிலத்தில் அது யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத் தான் முழுமையான ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்.
ஜனநாயகத்தில் முதலமைச்சர் அவர்களின் அரசின் எந்த ஒரு தவறுகளையும் அதிகார மீறல்களையும் சட்ட மன்றத்தின் மூலம் எதிர்க் கட்சிகளினால் சுட்டிக்காட்டப்படும். அதன் மூலம் அரசின் தவறுகளை திருத்திக்கொள்ளவில்லை என்றால் 5 வருடத்துக்குப் பிறகு அந்த அரசை மக்கள் மன்றம் மூலம் ஆட்சியைத் தூக்கியெறிவார்கள்.
ஆனால் அதிக அதிகாரம் கொண்ட யூனியன் பிரதேச ஆளுநர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட மக்கள் மன்றம் இல்லை. அவர்களின் தவறுகளை அல்லது அதிகார மீறல்களை குடியரசுத் தலைவருக்கும் மற்றும் மத்திய அரசிடமும் தான் சுட்டிக்காட்டவேண்டும். அவர்கள் நியமித்த நபரின் தவற்றை தண்டிப்பார்களா என்பது சந்தேகமே.
மக்கள் மன்றம் தேர்ந்தெடுக்காத, தனி நபர்களின் அதிகாரம் கண்டிப்பாக சர்வாதிகார போக்குக்கு வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.
மாநிலத்தில் உள்ள ஆளுநர்களின் அதிகாரம் போன்று யூனியன் பிரதேசத்தின் உள்ள ஆளுநரின் அதிகாரத்தையும் மாற்றியமைத்து, முதலமைச்சருக்கு நிர்வாகத்தை நிருவகிக்க முழு அதிகாரம் கொடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அல்லது புதுச்சேரியை மாநில அந்தஸ்தாக மாற்றுவது இந்த இரண்டில் ஒன்றைச் செயல்படுத்துவது ஜனநாயகத்துக்கு நல்லது.
யாருக்கு எந்த அளவுக்கு பொறுப்பு இருக்குயென்று சட்டத்தில் இருக்கு. அதை சரியாக பயன் படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் தான் பெரிய பதிவினு நினைத்தால் பாதிக்க படுரது மக்கள் தான்.
LikeLike