தமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு?
கலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும்.
அன்றைய நாளிதழ்களில் இருவரின் அறிக்கைதான் பெரும்பாலும் தலைப்புச் செய்தியாக வரும். அதுவும் கலைஞரின் அறிக்கைக்கு ஜெயலலிதாவிடமிருந்து மிகவும் கடுமையான சொற்களுடன் மறுப்பு அறிக்கை வரும். அதனைப் போன்று ஜெயலலிதாவிடம் இருந்து வரும் அறிக்கைக்குக் கலைஞரிடம் இருந்து எதுகை மோனையுடன் மறுப்பு அறிக்கை என்று மாறி மாறி அறிக்கை போர் நடைபெறும்.
தமிழ்நாட்டு தினசரி நாளிதழிகளில் யார் தலைப்பு செய்திகளில் வருவது என்று இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் அரசியலில் மற்ற அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்து அடையாளம் தெரியாமல் போனவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை இரு கட்சிகளிடம் தான் போட்டியிருக்கும். ஆரம்பக் காலத்தில் காங்கிரஸ் திமுகவையும், திமுக காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்தார்கள். அதன் பிறகு திமுக அதிமுகவையும் அதிமுக திமுகவையும் எதிர்த்து அரசியல் செய்தார்கள். ஆகையினால் தமிழ்நாட்டில் எப்போழுதும் இரு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி இருக்கும்.
இரு ஆளுமைகள் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் யாரை மையமாக வைத்து அரசியல் நடைபெறுகிறது என்று தெரியாமலும் மற்றும் யார் யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று தெரியாமலும் ஒரு குழப்பமான சூழ்நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இப்பொழுது இருக்கும் மிகப்பெரிய சவால் திமுக யாரை எதிர்த்து அரசியல் செய்வது என்பதுதான். அதிமுகவை எதிர்த்துத் தான் அரசியல் செய்ய வேண்டும் என்றாலும், அதிமுகா என்றால் அது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியா அல்லது தினகரன் அணியா என்ற குழப்பம் அந்தக் கட்சியினருக்கே இருக்கும் இந்த நேரத்தில், ஸ்டாலின் அவர்கள், தன் எதிர்க் கட்சியை அடையாளம் கண்டு எதிர்க்கவேண்டும்.
அதிமுகவிற்கு சவால் வேறு மாதிரியான ஒன்று, முதலில் அவர்கள் தங்களின் கட்சி யாரிடம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும், அதன்பிறகு திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் அது மட்டும் இல்லாமல் மத்தியில் இருக்கும் கட்சியினர் சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டும். இப்படி அதிமுகாவிற்கு பலமுனைகளில் சவால்கள் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த இரு கட்சிகள் மட்டுமில்லாமல், பல கட்சிகள் தங்கள் தான் அடுத்த தமிழ்நாட்டின் மிக முக்கியமான கட்சிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன அதில் மக்கள் நீதி மய்யமும் அடங்கும். அது மட்டும் இல்லாமல் இன்னும் சில கட்சிகள் உதயமாக காத்துக் கொண்டிருக்கின்றன.
முடிவாக, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பதைவிட தமிழ்நாட்டில் எந்தக் கட்சி, எந்தக் கட்சியுடன் அரசியல் செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்படும்.
தமிழ்நாட்டின் அரசியலில், எதிர்காலத்தில் யார் யார் இருப்பார்கள் என்பதைப் பாராளுமன்ற தேர்தல் தான் முடிவு செய்யும்.