சுஜாதாவின் 10 அறிவுரைகள்
இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 மிக முக்கியமான சுஜாதாவின் அறிவுரைகள்
ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்டதலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.
நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.
இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.
வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.
– சுஜாதா
மிகவும் தேவையானவை…
LikeLike
அருமை… இதில் பலதும் நான் செய்திருக்கிறேன் என நினைக்கும் போது மகிழ்ச்சி…
LikeLike
Nalla pathivuhalai thodarnthu padippathil miha mahilchiyaha vullathu…
LikeLike
Nice article, good info, great, keep it up
LikeLike
Nice article, Great, Good write up 👌👍
LikeLike