பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
அவர்களின் அறிக்கை.
கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்திய அரசியலை ஆதிக்கம் செய்துவந்ததும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்ததுமான பாபர் மசூதி – ராம ஜன்மபூமி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு மனநிறைவு அளிப்பதாக இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் தீர்ப்பின் மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நீதி கிடைக்கும்வரை பொறுமையோடு காத்திருப்போம் என அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்மீது இன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வால் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்பது இதில் குறிப்பிடப்படவில்லை. இப்படி நீதிபதியின் பெயர் மறைக்கப்படுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் நடந்திராத ஒன்றாகும். இது ஒரு சிறந்த தீர்ப்பாக இருக்கிறது என நீதிபதிகள் கருதியிருந்தால் அதை எழுதியவர் நிச்சயம் அதற்கு உரிமை கொண்டாடி இருப்பார். அவர்களுக்கே அந்த நம்பிக்கை இல்லாததுதான் எழுதிய நீதிபதியின் பெயர் விடுபட்டிருப்பதற்குக் காரணமோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.
மதச்சார்பின்மையே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை என்று தீர்ப்பில் உறுதிப்படுத்தப் பட்டிருப்பதை நாம் வரவேற்கலாம். 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது இரண்டுமே சட்டவிரோதமானவை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதை நாம் பாராட்டலாம்.
இந்துக் கோயில் ஒன்றை இடித்து அதன் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்மூலம் இந்த வழக்கின் ஒரு தரப்பாக இருக்கிற முஸ்லிம்கள் எந்த சட்டவிரோத செயலையும் செய்யவில்லை என்று இந்த தீர்ப்பின்மூலம் நாம் புரிந்து கொள்கிறோம்.
அதேவேளை மசூதிக்குள் சிலையை வைத்ததும், பின்னர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதும் சட்ட விரோத செயல்கள் என்று இந்த தீர்ப்பில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு கூறிவிட்டு குற்றம் இழைத்த தரப்பினரிடமே அந்த இடத்தை வாரி வழங்கியுள்ளது நீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை சட்டத்துக்குட்பட்டதுதானா என்ற குழப்பமே நமக்கு ஏற்படுகிறது.
2010 ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கில் சம்பந்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து முஸ்லிம்கள் ஒரு பாகமும் இந்துக்களுக்கு இரண்டு பாகமும் வழங்கியது .அதுவே நீதிக்குப் புறம்பானது என்று விமர்சிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இங்கோ அந்த ஒரு பாகமும் உங்களுக்கு இல்லை என்று முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
உச்சநீதிமன்றம் இது தொடர்பாக சமரசம் பேசுவதற்கு ஒரு குழுவை அமைத்தது அந்த குழுவின் சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறைக்குள் வைத்து சில பரிந்துரைகள் நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டன. அதன் பிறகுதான் உச்சநீதிமன்றம் தனது இறுதி விசாரணையைத் துவக்கியது இந்தத் தீர்ப்பை படிக்கும்போது மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வழங்கப்பட்ட அந்த சமரச குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் தீர்ப்பு எழுதப்பட்டிருக்குமோ என்று கருதத் தோன்றுகிறது. இது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதைவிடவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வோடு வழங்கப்பட்டிருக்கும் ஒரு சமரசத் தீர்வு என்பதே பொருத்தமாக இருக்கும்.
அரசாங்கத்தின் ஏனைய உறுப்புகள் சிதைத்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில் இந்திய மக்கள் இப்போது தமது பாதுகாவலாக உச்ச நீதிமன்றத்தைத்தான் பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு காப்பாற்றிவிட்டதெனக் கூற முடியவில்லை. இந்தத் தீர்ப்பின் மீதான சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் நீதி கிடைக்கும் என நம்புவோம். அதுவரை அமைதியோடு யாருடைய ஆத்திரமூட்டலுக்கும் பலியாகாமால் மதநல்லிணக்கம் காப்போம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் – தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
துணிச்சலான கருத்தை பதிவு பண்ண திருமா எம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
LikeLike