பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு
#AyodhyaVerdict

நேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் இருந்து வெளியேறவேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் ஆசை.
இந்த தீர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஒருவித நிம்மதியை கொடுத்து உள்ளது என்பதுதான் உண்மை, நிம்மதி மட்டுமில்லாமல் குற்ற உணர்விலிருந்து விடுபட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
தீர்ப்பின் படி
இந்துக் கோயில் ஒன்றை இடித்து அதன் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது
இரண்டுமே சட்டவிரோதமானவை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
பாபர் மசூதி இந்து கோயிலை இடித்து கட்டியது என்று இவ்வளவு நாள் சொல்லியது தவறு என்று தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது இதனைக் கேட்டு அனைத்து இஸ்லாமியர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இவ்வளவு நாள் இருந்த குற்ற உணர்ச்சி இன்றுடன் துடைக்கப்பட்டு விட்டது இந்த தீர்ப்பினால். குற்றம் சாட்டியவர்களும் அவர்களின் தவறை உணர்வார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தத் தீர்ப்புக்குப் பின், பல இந்து சகோதரர்கள் தெரிவித்த கருத்துக்கள் (அரசியல் கட்சியில் உள்ளவர்களைத் தவிர) அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஆறுதலைக் கொடுத்துள்ளது. இது ஒரு புதிய அனுபவம். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால். இந்த தீர்ப்பு வந்த பிறகு என் நண்பர் (இந்து நண்பர்) ஒரு கருத்தை வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். உடனே பல இந்து நண்பர்கள் அந்தக் கருத்தை வலைத்தளத்தில் இருந்து நீக்க சொல்லி அன்பு கட்டளையிட்டார்கள். என் நண்பரும் அந்த பதிவை வலைத்தளத்திலிருந்து நீக்கிவிட்டார்.
நாம் சுதந்திர போராட்ட காலத்தில் வாழவில்லை. ஆனால் நேற்று முதல் அந்த உணர்வை சுவாசிக்கின்றோம். ஆம் காந்தியின் அகிம்சையின் வீரியத்தை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து இஸ்லாமியர்களும் அகிம்சை வழியில் இந்த தீர்ப்பை கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஆகையினால்தான்அவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களின் அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இஸ்லாமியர்களின் வழியும் கூட, இனி வரும் காலங்களிலும் இவ் வழியிலேயே (அகிம்சை வழியில்) பயணித்து அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் பெறுவார்கள்..
இனிவரும் காலங்களில் இந்த மாதிரியான மனக்கசப்பு சம்பவங்கள் மதத்தின பெயரால் நடக்காமல் இருப்பதற்கு இரு தரப்புகளும் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்…
தாஜூதீன்
Peace begins….
LikeLiked by 1 person