பொருளாதார மந்தநிலை – ஊழியர்களை குறைக்கும் கட்டாயத்தில் ஐடி துறை
ஐடி நிறுவனங்கள் அதன் இடை நிலை ஊழியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்ட அளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், லாபத்தை தக்கவைக்க வேண்டுமெனில் தேவையில்லாத ஊழியர்களை குறைப்பதை தவிர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார்.
உலக அளவில் தொழில் நுட்பக் கட்டமைப்பு அடுத்த நிலைக்கு மாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அதற்கு ஏற்ற ஊழியர்கள் மட்டுமே நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் புதிய தொழில் நுட்பங்களில் பரிச்சயம் இல்லாத ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. அதன் பகுதியாக 5 முதல் 10 சதவீதம் அளவில் அதன் இடைநிலை ஊழியர்களை குறைக்க வேண்டிய நிலையில் ஐடி நிறுவனங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘தற்போது டிஜிட்டல் துறை அதிக அளவில் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் சேவையை எதிர்பார்க்கின்றனர் விளைவாக நிறுவனங்கள் தங்களை கூடுதல் செயல் திறன்மிக்கதாகவும், தேவையில்லாத செலவை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. அதனால் புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்த ஊழியர்களைத் தவிர, பிற ஊழியர்களின் எண்ணிக்கை நிறுவனங்களுக்கு சுமையாக உள்ளன. எனவே அவர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன’ என்று கூறினார்.
ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து அவர் கூறியபோது, ‘தற்போது இந்தியா பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலையை சந்தித்து வந்தாலும், அது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த சூழ் நிலையை ஐடி நிறுவனங்கள் இன்னும் கவனமாக கையாண்டால் அடுத்த வருடத்திலும் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்’ என்றார்.
சமீபத்தில் காக்னிசன்ட் நிறுவனம் 7,000 ஊழியர்களை குறைக்க உள்ளதாக அறிவித்தது. அது ஐடி ஊழியர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மேலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
நன்றி தி இந்து தமிழ்