குழந்தைகளின் எதிர்காலம் …
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பொதுத்தேர்வு சிறந்த வழி என்று 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது நமது அரசுகள். குழந்தைகளுக்கு அதுவும் 10 வயது குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் என்று நமக்குள் மிகபெரிய கேள்வியையும் மிகவும் மன வேதனையையும் ஏற்படுத்துகிறது. இந்த பொதுத்தேர்வு என்ற கொள்கை முடிவினால் ஏற்படும் பின்விளைவுகளை இந்த அரசுகள் உணரவில்லை என்பது தெளிவாகிறது.
எப்படி எதிர்கொள்வது
தன்னுடைய பத்தாவது வயதில், 5ஆம் வகுப்பு பொதுத் தேர்வினால் ஏற்படும் தோல்வியை குழந்தைகள் எப்படி எதிர்கொள்ளும்.
தன்னுடன் படித்த சக மாணவர்கள் முன்னேறி செல்கிறார்கள், நாம் பின் தங்குகிறோம் என்ற புரிதல் இன்றி தவிக்கும் குழந்தையின் மனநிலையை எப்படி எதிர்கொள்ளும்.
மறுபடியும் ஒரே வகுப்பில் படிக்க வேண்டும் என்ற சூழ்நிலையை குழந்தைகள் எப்படி எதிர்கொள்ளும்.
தாழ்வு மனநிலை அதிகமாகி குழந்தைகள் படிப்பை வெறுத்து புறந்தள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை
கல்வியின் தரம்
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் அனைவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்று பொதுத்தேர்வை குழந்தைகளுக்கு திணிப்பது எப்படி அறிவுசார்ந்த முடிவாக இருக்கும். கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், முதலில் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் பாடபுத்தகத்தின் தர்த்தையும் கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, அரசுகள் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாமல் குழந்தைகளின் மீது இந்த பொதுத்தேர்வுகளை தினிக்கிறார்கள். இவைகளினால் தான் பணவசதி உள்ளவர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். தனியார் பள்ளிகளில் சேர்ப்பதினால் தங்களின் குழந்தைகள் அரசு பொதுத்தேர்வை எளிதில் எதிர்கொள்வார்கள் என்று பொதுவான புத்தியாக மாறிப்போனது.
பள்ளிப் படிப்பை அனைவருக்குமானது என்பதிலிருந்து தடம்மாறி ஒரு குறிப்பிட்ட அவர்களுக்கான தாக மாறிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இனி 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களையும் பயிற்சி வகுப்பை நோக்கி இந்த அரசு தள்ளுகிறது.
ஏழ்மையின் காரணமாக அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 5ஆம் வகுப்பிலேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை விட்டுவிடுவதற்கான அதிக வாய்ப்புகளை இந்த அரசுகள் ஏற்படுத்திகிறது. அப்படி பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகளின் எதிர் காலம் இருண்ட காலமாக மாறிவிடுவது மட்டுமில்லாமல் குழந்தைகளை குடும்பத் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளி விடும் அபாயமும் இருக்கிறது
சமநிலையற்ற சமுதாயம்
ஒருபுறம் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மறுபுறம் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்று குழந்தைகளின் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. சமவாய்ப்பு இன்றி இருக்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பொதுத்தேர்வு இன்னும் சமமற்ற நிலையை அதிகரிக்கும்.
ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பும் எட்டாக்கனியாக மாறி விடும். இப்போது குறைந்தது 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் படிப்பு வாய்ப்புகள் இருக்கிறது, அதுவும் இன்றி 5ஆம் வகுப்பு வரை தான் என்று அவர்களை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளிவிடும். இதன் விளைவாக, கல்வி அற்ற ஒரு சமுதாயத்தை உருவாகிவிடும் அபாயம் இருக்கிறது. ஒரு சமுதாயம் பொருளாதாரத்தில் மேல் நிலைக்கு முன்னேற வேண்டுமென்றால் கல்வி மிகவும் முக்கியம்.
அனைவருக்கும் கல்வியை கொடுப்பதுதான் அரசின் தலையாய கடமை. தன் கடமையிலிருந்து விலகும் அரசும், நாடும் வளர்ச்சிப்பாதையில் செல்லாது.
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை
மாடல்ல மற்றை யவை
தாஜூதீன்
Yes! Government should change the plan or else people should change the government!!!
-VJ
LikeLike
அனைவருக்கும் கல்வியை கொடுப்பதுதான் கடமை!
LikeLike